மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி நீர் திறப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். டெல்டா பகுதிகளில் 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை மூலம் பாசன வாய்க்கால்கள் விரைவாக தூர்வாரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

குறுகிய கால நெல் ரக விதைகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும், நெல் சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நெல் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் விவசாயிகளும், வேளாண் தொழிலாளர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி சாகுபடி பணியை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 4 லட்சத்து 99 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது என்றும், இந்த ஆண்டு 5 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்ப்பதாக அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்றிட வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version