நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ஆம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும்,18 ஆம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மக்களுடன் வரிசையில் நின்று பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களித்த பின்னர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேர்தலில் வாக்களித்தது கும்பமேளாவில் புனித நீராடிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, தேசத்தின் அனைத்து வாக்காளர்களும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார். தீவிரவாதிகளின் ஆயுதத்தை முறியடிக்கும் ஆயுதமாக வாக்காளர் அட்டை உள்ளதாகவும் அவர் கூறினார்.