இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

இலங்கையுடனான உறவுக்கு தமது அரசு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான உச்சி மாநாடு, இணையம் வழியாக நடைபெற்றது. இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்முறையாக ஆலோசனை நடத்தினார். அப்போது, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாடு அடிப்படையில், இலங்கை அரசுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஒன்றுபட்ட இலங்கையில், சமரசம் மற்றும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் ராஜபக்சவிடம், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்ச, கொரோனா பெருந்தொற்று சூழலிலும், பிற நாடுகளுடன் இந்தியா இணைந்து பங்காற்றியதற்கு நன்றி தெரிவித்தார். எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி, இருநாடுகளுக்கும் பெரும் ஒத்துழைப்பு வழங்கும் வாய்ப்பாக அமைந்தது என்றும் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Exit mobile version