சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பை இழந்தது.
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் நுழைந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, திட்டமிட்டபடி விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். லேண்டரின் உயரம் 100 கிலோமீட்டரில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில், லேண்டர் இருந்த போது திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் லேண்டர் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள இயலாமல் போனது. இந்நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.