பாக். பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நிலைப்பாடு: அமெரிக்கா

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால் பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா கடந்த ஆண்டு நிறுத்தியது. அதேபோல், வாஷிங்டன் நகரில் இருக்க கூடிய பாகிஸ்தான் அதிகாரிகள் நகரைவிட்டு 25 கிலோ மீட்டர் சுற்று அளவுக்கு மேல் வெளியில் செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதித்தது.

இந்தநிலையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஒத்துழைப்பின் மூலமான நிலைத்தன்மையில் அமெரிக்கா புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அதேசமயம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாக கூறிய அவர், இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காண அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version