அச்சுறுத்தும் கொரானோ: அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் காலியான அத்தியாவசிய பொருட்கள்

கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவின் மூத்த சுகாதார அதிகாரிகளில் ஒருவரான அந்தோனி ஃபாசி (Anthony Fauci) என்பவர் அமெரிக்க அரசுக்கு சமீபத்தில் ஒரு புதிய ஆலோசனையை வழங்கினார். அமெரிக்காவில் 14 நாட்களுக்கு கடையடைப்பை நடத்தினால், அதன் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்கலாம், இதன் மூலம் கொரோனாவை முழுவதுமாக ஒழிக்கலாம் – என்பதே அந்தப் புதிய ஆலோசனை.

இதனை மனதில் வைத்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 15 ஆம் தேதியன்று ஊடகங்களிடம் பேசும் போது, அமெரிக்க மக்கள் அடுத்த சில வாரங்களுக்குத் தங்களுக்குத் தேவையான பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் அதிக பொருட்களை வாங்கி வைக்கத் தேவை இல்லை. டேக் இட் ஈசி, ஜஸ்ட் ரிலாக்ஸ் – என்றார்.

ஆனால் அமெரிக்க மக்கள் தங்கள் அதிபரின் உரையை அப்படி ஈசியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்த அவர்கள் விரைவில் கடையடைப்பு தொடங்கினால் என்ன செய்வது என்ற அச்சத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் இன்று அடுத்த 15 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியதால், தற்போது அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவுப்பொருட்கள், மருத்துவப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் ஆகியவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறிப்பாக உணவுப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரலாறு காணாத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரட்டுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சீஸ், வெண்ணெய் போன்றவை இருந்த பகுதிகள் காலியாகவே கிடக்கின்றன. இதனால் அமெரிக்க மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக வால்மார்ட் உள்ளிட்ட அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகள் தங்கள் வேலை நேரங்களைக் குறைத்துள்ளன. இதுவும் மக்களை பாதித்துள்ளது.

இந்நிலையில் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் கூடக் கிடைக்காத அமெரிக்க மக்கள் சிலர், ‘பிரட் கூட இல்லை, இதெல்லாம் வல்லரசா?’ என்ற ரீதியில் அமெரிக்க அரசை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தும் வருகின்றனர். ஆனால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் இதைவிடக் கடினமான முடிவுகளை அமெரிக்கா எடுக்கக் கூடும் – என்பதே சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version