வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. பருவமழை துவங்கிய நேரத்தில் வாயு புயல் உருவானதால், காற்றின் ஈரப்பதமானது வழக்கமான பாதைக்கு பதில் திசைமாறிச் சென்றது. இதனால் ஆந்திரா, தெலங்கானாவில் தொடங்க வேண்டிய பருவமழையில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதமானது அடுத்தடுத்து மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளது.
இதனிடையே வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக புழுதிப்புயல் உருவாகி சேதங்களை ஏற்படுத்துகிறது. புழுதிப்புயல் காரணமாக அங்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.
பீகார் மாநிலம் அவுரங்கபாத்தில் வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளனர். வடமாநிலங்கள் பலவற்றிலும் 115 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.