ஸ்டாலினுக்கு கள நிலவரம் தெரியவில்லை – அமைச்சர் காமராஜ் விமர்சனம்

நேரடி கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சரின் அறிக்கையை செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2019-2020 ஆண்டு கொள்முதல் பருவத்தில், 2,135 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து, 32,41,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வரலாற்றிலயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் செய்து அ.தி.மு.க. அரசு சாதனை செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் மட்டும் 12,77,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மொத்தம் 2,416 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வித உச்ச வரம்பின்றி முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள் என எதிர்கட்சி தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தற்போது, கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ள தொகையுடன், மாநில அரசின் சார்பாக 50 முதல் 70 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதையும் அமைச்சர் சுட்டி காட்டியுள்ளார்.

நெல்கொள்முதல் உண்மை நிலவரங்கள் இவ்வாறு இருக்க, கள நிலவரங்கள் பற்றி எதுவும் தெரியாமல், விவசாயிகளிடம் அ.தி.மு.க. அரசு பெற்று வரும் நற்பெயரைக் கண்டு பொறுக்க முடியாமல், எதிர்கட்சித் தலைவர் குறை கூறிவருவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதை மக்கள் அறிவார்கள் என அமைச்சர் காமராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version