கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாக எண்ணி மக்கள் அணியும் ஒரு குறிப்பிட்ட வகை முகமூடியால் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சிக்குரிய எச்சரிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் எந்தெந்த வகைகளில் எல்லாம் பரவுகின்றது? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்று இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எண்ணும் மக்களின் ஒரே தீர்வாக சுவாசப் பாதுகாப்பு முகமூடிகள் உள்ளன.
இந்த முகமூடிகளை அணியும் போது காற்றில் பரவும் கொரோனா வைரசில் இருந்து மக்களால் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் சுவாசப் பாதுகாப்பு முகமூடிகளில் பல வகைகள் உள்ளன. அவற்றை அணிவதற்கு பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன. அதுபற்றி மக்களுக்குத் தெரியவில்லை என்றால், தவறான முகமூடிகளை அணிந்து புதிய உடல் நோய்களை ஏற்படுத்திக் கொள்ளவும், உரிய நிபந்தனைகளைப் பின்பற்றாமல், பாதுகாப்பில் குறைபாட்டை சந்திக்கவும் வழி ஏற்படுகின்றது.
சமீபத்தில்தான் அமெரிக்க நாட்டின் சுகாதார அமைப்பு, ‘கொரோனா பாதுகாப்புக்கான முகமூடி அணிபவர்கள், முகமூடிக்கு வெளியே தெரியும்படி மீசையோ தாடியோ வைக்க வேண்டாம்., அதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உண்டாகும்’ – என்று செய்தி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது ஐக்கிய அரபு அமீரகம் ’என் – 95’ என்ற குறிப்பிட்ட வகை முகமூடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த எச்சரிக்கையில், ’என் – 95 என்பது முன்னெச்சரிக்கைக்காக அணியும் முகமூடி அல்ல, அது சிகிச்சையில் உள்ளவர்களுக்கான முகமூடி. இதனை ஒரு மனிதர் அணியும் போது அவரது சுவாசப் பாதையில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும் குழந்தைகள் என் – 95 முகமூடியை அணிய ஏற்கனவே தடை உள்ளது’ – என்று ஐக்கிய அரபு அமீரகம் கூறி உள்ளது.
இது போன்ற மருத்துவ முகமூடிகள் தவிர பாதுகாப்பற்ற முகமூடிகள், போலி முகமூடிகள், தரமற்ற முகமூடிகள் போன்றவற்றையும் உலக மக்கள் அணிந்து வருகிறார்கள். அது குறித்து பல்வேறு நாடுகளும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.