நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை வழிமறித்த மர்ம நபர்கள் அவர்களை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தங்கள் வீட்டு பிள்ளைகள் கொடூரமாக நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறுகிறார்கள் அவர்களது தாய்மார்கள். என்ன நடந்தது வாருங்கள் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20 ), மற்றும் வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 17), நண்பர்களான இவர்கள் இருவரில் அர்ஜுனன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மினி பேருந்தில் பயணம் செய்த போது பேருந்து ஓட்டுனராக இருந்த சுந்தர் என்பவருடன் தகராறு ஏற்பட்டு உள்ளது, அதன் பின்னர் இருவரும் தனி தனி திசைக்கு சென்றாலும் அர்ஜுனன் மீதான பகையை சுந்தர் வளர்த்து கொண்டு வந்துள்ளார், இந்த பிரச்சனையில் அர்ஜுனனுக்கு ஆதரவாக அவரது நண்பர் அஜித் குமார் இருந்து வந்துள்ளார், அதே போன்று சுந்தருக்கு ஆதரவாக அவரது நண்பர் ரமேஷ் இருந்து வந்துள்ளார்,
ஏற்கனவே இவர்கள் பல்வேறு இடங்களில் சண்டையிட்டதன் அடையாளமாக ஈத்தாமொழி, சுசீந்திரம் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு உள்ளது, நாள் பட்ட பகை ஒரு நாள் முடிவிற்கு வரும் என்ற பழமொழிக்கேற்ப நேற்று நாகர்கோவில் அருகே வண்டி குடியிருப்பு கிராமத்தில் கோவில் திருவிழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது அர்ஜுனன் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து அர்ஜுனன் வெளியேறினாலும் தீரா பகை காரணமாக ஆத்திரம் அடைந்த சுந்தர் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் உட்பட 6 பேர் இணைந்து அர்ஜுனனை தேடி வந்துள்ளனர்,
ஒரு கட்டத்தில் நாகர்கோவில் அருகே சித்திரை திருமகராஜபுரம் என்ற இடத்தில் கால்வாய் கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் போது எதிரே 3 இரு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த சுந்தர் மற்றும் ரமேஷ் தலைமையிலான மர்ம கும்பல் அஜித்குமார் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர் இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இவர்கள் இருவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்ட நிலையில் கொலைச்செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்,
இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுசீந்திரம் போலீசார் அஜித் குமார் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சுந்தர் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொலை செய்த கையோடு சென்னைக்கு சென்று அங்குள்ள தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்,
நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களை விசாரணைக்கு எடுக்க சுசீந்திரம் போலீசார் சென்னை விரைந்து உள்ளனர், கொலை குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய முடியும் என்ற நிலையில் படிக்க வேண்டிய வயதில் படிப்பை தொலைத்து விட்டு அடிதடி, கொலை போன்ற குற்றங்களை செய்ய துணியும் இளைஞர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும் என்பதே உண்மை.