திருப்பதி அருகே செம்மரம் வெட்டி 2 கார்களில் கடத்திய விழுப்புரத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் கார்களை பறிமுதல் செய்தனர்.
செம்மரங்களை கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சித்தூர் தாலுகா காவல்துறையினர், திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருக்கம்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து சித்தூரை நோக்கி அதிவேகமாக வந்த 2 கார்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் கார்கள் நிற்காமல் சென்றதால் பின்தொடர்ந்து வழிமறித்து கார்களை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த இருவர் தப்பி ஓட முயன்ற நிலையில் காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கார்களை சோதனை செய்த போது, 22 செம்மரக் கட்டைகள் இருந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தி சென்னையில் விற்பனை செய்ய கொண்டு சென்றதாக தெரியவந்தது.
கைதானவர்கள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா நாகலூரு கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மற்றும் சின்னசேலம் தாலுக்கா தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஆண்டி ஆகியோர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே இவர்கள் 2 பேரும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குடிப்பாளா காவல் நிலையம், எர்ராவாரி பாளையம் காவல் நிலையம் ஆகியவற்றில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வெளியில் வந்தவர்கள் என்பதும், தொடர்ந்து செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்டு வருவதும் தெரியவந்தது.