5 நாட்களாக தவித்த குடும்பம் – நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு –  சொந்த ஊருக்கு அழைத்து வர விரைந்தது சிறப்பு கப்பல்!  

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் நடுக்கடலில் மாயமான 19 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பரிதவித்து வந்த மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.  

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 19 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுகடலில் மாயமாயினர். 

புயல் காரணமாக அனைத்து மீனவர்களும் கரை திரும்பி வரும் நிலையில், இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் 2 டார்னியர் விமானங்கள் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது.

 இந்திய பெருங்கடல், மாலத்தீவு மற்றும் ஓமன் நாட்டு எல்லை ஓரங்களில் தேடும் பணி நடைபெற்றது.  

இந்த நிலையில் மீனவர்கள் 19 பேரும் மாலத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும் போது,  19 மீனவர்களும் மாலத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

அவர்களை அழைத்து வர இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த சிறப்பு கப்பல் ஒன்று சென்றுள்ளதாகவும்,  இன்று அவர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நாளை மாலை 19 பேரும் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிவித்தார். 

Exit mobile version