மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 18ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 55 மீனவர்களையும், 8 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

இதேபோல், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரும், அவர்களது 2 விசைபடகும் சிறைபிடிக்கப்பட்டன. சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டதில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், மல்லிப்பட்டினம் மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால், வருகிற ஜனவரி 1-ஆம் தேதி தங்கச்சி மடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version