" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படவிருக்கும் சூழலில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் செயலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள தோடு, அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து 21 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version