திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகன் பற்றிய வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லலிதா ஜுவல்லரி நகை கடையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளையில் தொடர்புடைய மணிகண்டன், சுரேஷ் மற்றும் அவரின் உறவினர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்துக்கு தலைவனாக செயல்பட்ட முருகன் எனபவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவரை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹெச்.ஐ.வி நோயாளியான முருகன் மீது தென் மாநிலங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 17 வீடுகளில் கொள்ளை போன சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்களின் போது முருகன் செல்போனை பயன்படுத்தியதில்லை என்றும், வாக்கி டாக்கி மட்டும் பயன்படுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக இரண்டு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், திருடிய பணத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தையும் கட்டி வருவது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அறிந்த காவல்துறையினர் வருவாய்த்துறை உதவியுடன் அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்ததுடன் முருகனை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.