மாநிலம் முழுவதும் பொதுப்பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் 75 சதவீத பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் இருந்த பொதுப்பேருந்து போக்குவரத்து சேவை மாநிலம் முழுவதும் இன்று முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரித்தது. ஆனால் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அதிகளவில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்
இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் உள்ள 19200 பேருந்துகளில் இன்று 14715 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்
கொரோனாவால் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் நிலையில் போதிய பேருந்து சேவை இல்லாமல் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து இயக்கம் குறித்து அரசு கொடுத்த அறிவிப்பையே முழுமையாக செயல்படுத்துவதற்கான திட்டமிடல் போக்குவரத்துத்துறைக்கு இல்லையா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக 10 ஆயிரம் நபர்கள் பணிக்கு எடுக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.