மஞ்சள் நிறத்துக்கு மாறிய பேருந்துகள்! தந்தைக்காக குறியீடு வைக்கிறாரா ஸ்டாலின்!

தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயங்கி வரும் நிலையில், தற்போது 100 அரசு பேருந்துகளை மஞ்சள் நிறத்திற்கு மாற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின். கருணாநிதியின் அடையாளத்தை நிறுவ போக்குவரத்துக் கழகம் சீரழிக்கப்படுவது குறித்து, இச்செய்தி தொகுப்பில் காண்போம்.

தமிழக போக்குவரத்துத் துறையில் விழுப்புரம், கும்பகோணம், கோவை என மொத்தம் 8 விரைவு போக்குவரத்து கழக மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுச்சேரி, கர்நாடகம் என பிற மாநிலங்களுக்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொலைதூரம் செல்லும் பேருந்துகளில் போதிய வசதிகள் இல்லை என கூறி, பொதுமக்கள் அரசு பேருந்துகளை தவிர்த்து, தனியார் பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு அரசு போக்குவரத்து கழகம் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை அதிகரிக்கும் வகையில், தனியார் பேருந்துகளுக்கு இணையாக தரத்தை உயர்த்த விடியா திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கருணாநிதி அணிந்திருந்த மஞ்சள் நிற துண்டை குறிக்கும் வகையில், அரசு பேருந்துகளை மஞ்சள் நிறமாக மாற்றி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார் ஸ்டாலின். இந்த வெற்று விளம்பரத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து 100 அரசுப் பேருந்துகள் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயங்கி வருவதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்யாததாலும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும், போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தரமான புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதிலும், விடியா அரசு எந்த ஒரு அக்கறையையும் காட்டாமல் போக்குவரத்து துறையை முடக்கும் வகையில் மெத்தனம் காட்டி வருகிறது.

இதற்கிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில், அரசு மருத்துவமனைகள், நூலகங்களுக்கு தன் தந்தையின் பெயரை வைத்த வரிசையில், தற்போது பேருந்துகளுக்கு மஞ்சள் பெயின்ட் அடித்து மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார் ஸ்டாலின்.

இதனிடையே தினந்தோறும் விழா நடத்துவதிலும், விழாக்களில் கலந்து கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்தி வரும் போட்டோஷுட் முதல்வர், தற்போது அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடித்திருக்கும் செயலால், ஜோதிடம் பார்த்துதான் ஆட்சி நடத்துகிறாரோ என எண்ணத் தோன்றுவதாக, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் சூட்டிங் அரசர், ரிமோட் நாயகர், விழா நாயகர் என பல்வேறு பட்டங்களை ஸ்டாலினுக்கு வழங்கலாம் எனவும் அவர் விமர்சித்தார்.

தன் தந்தைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில், அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் தீட்டியுள்ள ஸ்டாலின், விரைவில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே, தனது தந்தையின் பெயரை சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version