டாஸ்மாக் ஊழியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.1.3 லட்சம் கொள்ளை

தர்மபுரி அருகே துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் ஒரு மணிநேரத்திற்குள் மடக்கிபிடித்து அசத்தினர்.

தர்மபுரி மாவட்டம் சிக்களூரில் இயங்கி வரும் மதுபானக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்துவரும் மகரஜோதி, நேற்றிரவு கணக்கை முடித்துவிட்டு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். அப்போது, நரிப்பள்ளி அருகே முக மூடி அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர், மகரஜோதியின் கைகளை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டார். இதில் மகரஜோதியின் வலது மற்றும் இடது கைகளில் 4 குண்டுகள் துளைத்தன. இதையடுத்து அவரிடமிருந்த மொத்த பணமும் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயமடைந்த மது கடை ஊழியர் மகரஜோதி, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறையினர், பயர்நாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களை பரிசோதித்ததில் மகரஜோதியிடம் திருடிய பணமும், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கைத் துப்பாக்கியும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version