கோவை அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர், தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததன் மூலம் பெருமை அடைவதாக கூறினார். இந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அதிக பயனடையும் என பிரதமர் தெரிவித்தார்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை மேற்கொள் காட்டிய பிரதமர், பவானிசாகர் அணையை நவீனப்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது என குறிப்பிட்ட பிரதமர், தொழில்துறை வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் அவசியம் என தெரிவித்தார்.
நெய்வேலியில் புதிய 2 ஆயிரத்து 500 மெகாவாட் அனல்மின் திட்டமும், தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையமும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 65 சதவீதம் தமிழ்நாட்டிற்கே வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
கடல்சார் வணிகத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, வ.உ.சி துறைமுகம், சரக்கு கையாளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
சாகர்மாலா திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2035ஆம்ஆண்டு வரை 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தனிநபரின் கண்ணியத்தை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனக் கூறிய பிரதமர், பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் திருப்பூர், மதுரையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.