தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சிப்பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் நாகப்பட்டினம் மாவட்டதில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோலியம் ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆண்டு, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, கடலூர் மற்றும் நாகைப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 22 ஆயிரத்து 938 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 57 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில், மீத்தேன், பெட்ரோலியம் உள்ளிட்ட தொழில் சார்ந்த விரிவாக்கத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.