ஆடி அமாவாசையையொட்டி திருச்சி காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
ஆடி அமாவசையையோட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னோர்கள் பூமியை விட்டு மறைந்தாலும் ஆடி அமாவசை தினத்தில் அவர்களை வழிபட்டால், குடும்பத்திற்கு அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, அம்மா மண்டபத்தில் ஏராளமோனோர் திதி கொடுத்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து இருந்தது.
இதேபோல், கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி வழிபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களுக்கு மோட்சம் கிடைப்பதற்காகவும் ஏராளமானோர் தர்ப்பணம் செலுத்தி வழிபாடு செய்தனர். இதனால் குற்றால அருவி பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சிரமமின்றி குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வீட்டில் குழந்தை பிறப்பு, வாழ்வில் நலம் பெற வேண்டி வழிபாடு செய்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்