தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

60 ஆண்டுகள் கொண்ட தமிழ் வருடங்களில், விளம்பி வருடம் நிறைவடைந்து, விகாரி ஆண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் என வேண்டியதாக மக்கள் தெரிவித்தனர்.

மதுரையில் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தமுக்கம் மைதானம் அருகே உள்ள பூங்கா முருகன் கோயிலில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலையில் கோயிலுக்கு சென்ற மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

உலகப்புகழ்பெற்ற தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசுக்கனி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விசுக்கனி தரிசனம் செய்து பின்னர் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி சாலை குமாரசாமி கோயில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி, வழிபாடு செய்தனர்.

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷுவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற கனி காணுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நாளில் சுவாமியையும் கனியையும் தரிசனம் செய்து கைநீட்டமும் பெற்றால் வாழ்வில் நீங்கா செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி நாகர்கோவிலில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், கிருஷ்ணன் கோவில், அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு கனிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மற்றும் கனி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Exit mobile version