கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது

கோயில்களில் தனி நபர்கள் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணங்களை அரசின் அனுமதியின்றி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் அறங்காவலர் சேதுராமன், கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் எந்த அதிகாரமுமில்லாமல் சட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. கோயில் அறங்காவலர் சேதுராமன் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சட்டவிரோதமாக மாயாண்டி கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிப்பதை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்பி, சட்ட விரோத கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டார்.

சட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சிவில் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.

Exit mobile version