திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஓட்டலில் சிக்கன் சேமியா ஃபிரை கிடைக்காத ஆத்திரத்தில் காங்கிரஸ் பிரமுகரும் அவரது நண்பரும் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபு மற்றும் அவரது நண்பர் தயாளன் ஆகியோர் சிக்கன் சேமியா ஃபிரை கேட்டுள்ளனர். அது மாலையில் மட்டும் தான் கிடைக்கும் என ஓட்டல் உரிமையாளர் முகமதுசாலிக் கூறியுள்ளார். ஆனால், தங்களுக்கு இப்போதே வேண்டும் என்று கூறி காங்கிரஸ் பிரமுகர் பிரபுவும், அவரது கூட்டாளி தயாளனும் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரடைந்த அவர்கள், கடை உரிமையாளர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த ஊழியர்களும் தாக்கப்பட்டனர்.
இருப்பினும் ஆத்திரம் தீராத அவர்கள், பிரியாணி கடையை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பிரமுகர் குண்டர்களுடன் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.