ஆன்லைன் டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். டெண்டருக்காக RTGS என்ற பணப்பரிமாற்ற முறையை நாட்டிலேயே முதல் முறையாக கொண்டு வந்தவர் முதலமைச்சர் பழனிசாமி என்று பொன்னையன் கூறினார்.
இந்த முறையால் விண்ணப்பித்தவர்களின் விவரம் மற்றும் கேட்புத் தொகையை அறிய முடியாது என்று விளக்கம் அளித்த அவர், ஆன்லைன் டெண்டரை திறந்த பிறகுதான் அதன் விபரம் தெரியவரும் என்றார்.
திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட முறையில்தான், யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும் என பொன்னையன் தெரிவித்தார்.
டெண்டர் எடுத்துள்ள ராமலிங்கம் நிறுவனத்தினர், உறவினர் என்ற முறையில் வரவில்லை என்று கூறிய பொன்னையன், இந்த நிறுவனத்திற்கு திமுக ஆட்சியில் 10 டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருகிலோ மீட்டர் சாலைக்கு திமுக ஆட்சியில் 33 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது சாலை பராமரிப்பு செலவையும் சேர்த்து ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 கோடிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்னையன் விளக்கம் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவுக்கோ, முதலமைச்சருக்கோ கட்டுப்பட்டதல்ல என்று அவர் குறிப்பிட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை தன்னாட்சி அமைப்பு என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பணியாற்றும் அதன் செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது எனவும் பொன்னையன் திட்டவட்டமாக கூறினார்.