தேனி மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிருபித்துள்ளது

தேனி மாவட்டத்தில், 3 ஒன்றியங்களில்  தி.மு.க அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், அதன் அராஜகம் காரணமாக, ஒன்றியத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க-விடம் பறிகொடுக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டமாக, மாவட்டத் தலைவர், ஒன்றியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் ரகசியத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 8 மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களை வென்றுள்ள அ.தி.மு.க, அதீதப் பெரும்பான்மையுடன் மாவட்டத் தலைவர் பதவியைப் பெறப் போகிறது. அதேப்போல, தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க, அதிக ஒன்றியக் கவுன்சிலர்களை வென்றுள்ளது. அதனால், நாளை நடைபெற உள்ள ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, 4 ஒன்றியங்களின் தலைவர் பதவியையும், அ.தி.முக கைப்பற்றப் போவதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டது.  

ஆனால், தேனி, சின்னமனூர், பெரியகுளம் ஒன்றியங்களில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. அந்த ஒன்றியங்களில், தி.மு.க கூடுதல் இடங்களைப் பெற்றிருந்தது. அதனால், அந்த  ஒன்றியங்களின், தலைவர் பதவிகள் திமுக-விடம் செல்லும் நிலையே ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து அந்தக் கட்சியினர் செய்த அராஜகச் செயல்களால், தற்போது அவற்றையும் அ.தி.மு.க-விடம் இழக்கும் நிலைக்கு தி.மு.க தள்ளப்பட்டுள்ளது.  

சின்னமனூர் ஒன்றியத்தில், பொட்டிபுரம் 1-வது வார்டில், திமுக சார்பில்  வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் ஜெயந்தியை, ரகசிய இடத்தில் அடைத்து வைக்க திமுக-வினர்  முயற்சித்தனர். அதற்கு உடன்படாத, ஜெயந்தியை வீடு புகுந்து தாக்கினார். இதில் அதிருப்தியடைந்த  ஜெயந்தி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து, தனது ஆதரவை அதிமுக-வுக்குத் தெரிவித்தார். இதனால், சின்னமனூர் ஒன்றியத்தில், தி.மு.க-வின் பலம் 5-ஆகக் குறைந்து, அ.தி.மு.க-வின் பலம் அதிகரித்துள்ளது. இதோடு, ஜெயந்தி விவகாரத்தில் திமுக-வின் அராஜக செயல்களைப் பார்த்து, வெறுத்துப்போன மேலும் சில தி.மு.க கவுன்சிலர்களும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க உள்ளனர். இதனால், சின்னமனூர் ஒன்றியத் தலைவர் பதவியையும் அ.தி.மு.க-வே கைப்பற்றப் போவது ஏறத்தாழ உறதியாகி உள்ளது.

இதேபோல, பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் 8-வது வார்டுக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றியக் கவுன்சிலர் செல்வம், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அதிமுக-வுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதனால்,  பெரியகுளம் ஒன்றியத்திலும் தி.மு.க-வின் பலம் 7 ஆக குறைந்துவிட்டது.

தேனி ஒன்றியத்தில் 7 இடங்களில் திமுக-வும், 4 இடங்களில் அ.தி.மு.க-வும், ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர், தனது ஆதரவை அ.தி.மு.க-வுக்கு தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க கவுன்சிலர்கள் சிலரும் அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளனர். அதனால், தேனி ஒன்றியத் தலைவர் பதவியும் அ.தி.மு.க வசம் செல்வது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் தேனியில், 3 ஒன்றியங்களில் பெரும்பான்மை பெற்றும், ஒன்றியத் தலைவர் பதவியைக் திமுக கோட்டை விட்டுள்ளது. இதையடுத்து, தேனி தி.மு.க மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என அந்தக் கட்சியினர் போர்க் கொடி தூக்கி உள்ளனர். தேனியில், அதீதப் பெரும்பான்மையுடன் மாவட்டத் தலைவர் பதவியை தக்க வைத்துள்ள அதிமுக, தற்போது அங்குள்ள 8 ஒன்றியத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றப் போகிறது.

Exit mobile version