வருடத்திற்கு 16,000 டன் தக்காளி உற்பத்தி செய்யப்படும் மேட்டூரில் உள்ள மேச்சேரியில் விரைவில் குளிர்சாதன கிடங்கு தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் அதிக அளவில் தக்காளி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மேச்சேரி ஒன்றியத்தில் நடப்பாண்டில் சுமார் 800 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். ஆண்டுக்கு 16,000 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. மேச்சேரி தக்காளியை சென்னை, மதுரை, கோவை, கேரளா மற்றும் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மேச்சேரி விவசாயிகளின் பணப் பயிர்களில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை திறக்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் தக்காளி குளிர் பதன கிடங்கு விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் .இந்த அறிவிப்பு அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .