தமிழ்நாடு சூரிய ஒளி மின்சக்தி கொள்கையின்படி 2023ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், பழங்குடியினர் நலனுக்காக 482 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறைக்காக 911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்மா பசுமை கிராமம் என்ற நிலையான மின்கிராமங்களை உருவாக்க புதிய திட்டம் உருவாக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் சுட்டிக் காட்டினார். பசுமை எரிசக்தியை மேம்படுத்தும் நோக்கில் தேனி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதக்கும் சூரியசக்தி மின்திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
250 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய சக்தி மின்திட்டம் ஆயிரத்து 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். 500 மெகாவாட் திறன்கொண்ட கடலாடி மிக உய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம் 2 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு சூரிய ஒளி மின்சக்தி கொள்கையின்படி வரும் 2023ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 572 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்காக 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.