பூசாரி வீட்டில் நடந்ததுணிகர கொள்ளை ; முகமூடி கும்பல்சிக்கியது எப்படி?

“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் காட்டப்பட்ட பவாரியா கொள்ளையர்கள் பாணியில், கொள்ளையடிக்கும் முகமூடிக் கொள்ளைக் கும்பலை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மடக்கிப்பிடித்துள்ளது. திரைப்படத்தில் வரும் சம்பவங்களைப் போல் நடந்த விறுவிறுப்பான அந்தக் காட்சிகளைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. முகமுடி அணிந்த கும்பல்… கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள்… வயர் டேப்களை வைத்து கட்டிப்போடுவது… என பவாரியா கொள்ளைக் கும்பல் பாணியில் வலம் வந்த முகமூடி கொள்ளைக் கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தை கடந்த சில நாள்களாக அலறவிட்டது. திண்டுக்கல் மாவட்ட மக்கள், முகமூடிக் கொள்ளையர்களுக்கு அஞ்சி வாழ்ந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது திண்டுக்கல் காவல்துறை. அதற்கு காரணமாக அமைந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சி அருகே உள்ள சுக்காம்பட்டியில் அரங்கேறியது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த துரைஆதித்தன் என்பவர் தனது வீட்டருகே வாஸ்தீஸ்வரர் சுவாமிக்கு கோவில் கட்டி, அதன் பூசாரியாகவும், குறி சொல்பவராகவும் இருந்து வந்தார். அதனால், அந்தப் பகுதி மக்கள் துரை ஆதித்தனை, சித்தர் என்று அழைத்து வந்தனர். இந்நிலையில், குடும்பத்தினரோடு அவர் வீட்டில் இருந்த மதிய நேரத்தில், திடீரென 7 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று, அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தது. துரை ஆதித்தன் குடும்பத்தினரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய அந்தக் கும்பல், வயர் டேப்பால் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 35 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை சுருட்டி விட்டு தப்பியோடியது.

மர்மக்கும்பல் வெளியேறியதும், துரை ஆதித்தன் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் துரை ஆதித்தன், சாமியின் அருள் வந்து, குறி சொல்வதாக நினைத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். அதையடுத்து, துரை ஆதித்தன் வீட்டில் இருந்த அனைவரும் மொத்தமாக சேர்ந்து அலறியதும், அக்கம்-பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். அப்போது, துரை ஆதித்தன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் கை-கால்கள் கட்டிப்போடப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டவர்கள், வேடசந்தூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொள்ளைக் கும்பல் பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன், டாடா ஏஸ் வாகனத்தில் வந்த ஒரு நபர், அந்தப் பகுதியில் இருந்த கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் வாங்குவதுபோல், துரை ஆதித்தன் வீட்டை நோட்டமிட்டது தெரியவந்தது. அதையடுத்து அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், கொள்ளைக் கும்பல், டவேரா வாகனம் ஒன்றில் தப்பிச் செல்வது தெரியவந்தது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர். அதில், கடந்த 15-ஆம் தேதியன்று, பழனியை அடுத்த தாழையூத்து கிராமத்தில் இருந்த வீட்டிலும், மதிய நேரத்தில் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் காவலுக்கு இருந்த நாயை அரிவாளால் வெட்டிவிட்டு, வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 20 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தகவலும் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், துரை ஆதித்தன் வீட்டில் கொள்ளையடித்த முகமூடி கும்பலை உடனே பிடிக்க திட்டமிட்டனர். கொள்ளைக் கும்பல் நீண்ட தொலைவு சென்றிருக்க முடியாது என்பதைக் கணித்த காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், அந்த கொள்ளைக் கும்பல், திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியைத் தாண்டிவிட்ட தகவல் தெரிந்தது. அதையடுத்து பக்கத்து மாவட்ட காவல் துறையினருக்கும், தகவல் தெரிவித்தனர். ஆங்காங்கே செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள அச்சம்பட்டி காட்டுப்பகுதி அருகே கொள்ளைக் கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர்.

7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலில், இரண்டு பேர் தப்பி காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். மற்ற 5 பேரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது இதே கும்பலா? அல்லது அது வேறோரு கும்பலா என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைச் சம்பவம்
நடந்த சில மணி நேரங்களிலேயே, ஒட்டுமொத்த காவல்துறையும் களம் இறங்கி, பக்கத்து மாவட்ட காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் கொள்ளைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது, திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Exit mobile version