கொரானா அச்சுறுத்தல் காரணமாக ஹாலிவுட் மற்றும் இந்தியத் திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ள நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூடும் படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் வாரங்களில் வெளியாக இருந்த திரைப்படங்கள் வெளியாவதில் கால தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. குறிப்பாக, “காடன், சூரரைப்போற்று” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. “No time to Die, Mulan, Fast and furious 9” உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான “சூரிய வன்ஷி” மற்றும் ரன்வீர் சிங் நடிப்பில் தயாரான “83” என்ற திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்படும் “மாஸ்டர்” திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அஜித், சிம்பு, சல்மான்கான் ஆகியோர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.