திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமராஜபுரத்தை சேர்ந்த ஜானகி, தன்னுடைய குழந்தையை அரியூர் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரபுவும், அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் சண்முகவள்ளியும் கடத்திச் சென்றதாக லால்குடி போலீசில் புகார் செய்தார். மேலும் உயர்நீதிமன்றத்திலும் ஜானகி வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி லால்குடி டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பெற்ற தாயே குழந்தையை விற்பனை செய்துவிட்டு கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
திருமணமாகாத ஜானகி, உறவினரால் கர்ப்பமான நிலையில், வழக்கு ஒன்றுக்காக வழக்கறிஞர் பிரபுவை சந்தித்துள்ளார். அப்போது குழந்தையை கலைத்துவிடும் மனநிலையில் இருப்பதாக கூறிய ஜானகியிடம், குழந்தையை பெற்றுத்தரும்படியும், பெண்குழந்தை என்றால் 3லட்சத்துக்கும், ஆண் குழந்தை என்றால் 5 லட்சத்துக்கும் அதனை விற்றுவிடலாம் என்றும் வழக்கறிஞர் பிரபு சொன்னதாக கூறப்படுகிறது.
அதற்கு ஜானகி சம்மதித்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, 23ஆம்தேதி பிரபுவும், சண்முகவள்ளியும் உத்தமர்கோயில் பகுதியில் பெற்றுக் கொண்டு 80ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் 3 லட்சத்து 50ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்த தகவல் கிடைக்க, வழக்கறிஞர் பிரபுவிடம் சென்று ஜானகி பணத்தை கேட்டுள்ளார். அவர் தரமறுத்த நிலையில்தான் ஜானகி குழந்தை கடத்தல் புகார் அளித்த விவரம் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜானகியையும், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வழக்கறிஞர் பிரபு, சண்முகவள்ளி, லால்குடி மணக்கால் பகுதியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் ஆகாஷ், திருவெறும்பூரை சேர்ந்த கவிதா, ஈரோட்டைச் சேர்ந்த சண்முகப்பிரியா ஆகிய 6 பேரை லால்குடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தை விற்பனையில் மூளையாகச் செயல்பட்ட, டெல்லியைச் சேர்ந்த கோபிநாத் என்ற கோபாலகிருஷ்ணனை டெல்லி சென்று கைது செய்த தனிப்படை போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், கர்நாடகமாநிலம், வெள்ளகாரா பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.