கழிவுநீர் கலந்த குடிநீர்! 50 க்கும் மேற்பட்டரோருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை!

திருச்சி உறையூரில் மாநகராட்சியால் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரால் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரையிலும் மருத்துவ முகாமை நடத்த முயற்சிக்காத விடியா அரசின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

திருச்சி மாநகராட்சி, உறையூரில் உள்ள சோழராஜபுரம், பாக்குப்பேட்டை மற்றும் சாலை ரோடு ஆகிய பகுதிகளில், சில நாட்களாக பொதுமக்களில் பலருக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கழிவுநீர் கலந்த துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்படும் குடிநீரே மஞ்சள் காமாலை பரவலுக்கு காரணம் என பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் சுகாதாரத் துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், இதுவரையிலும் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

பின்னர் பெயரளவுக்கு குடிநீரின் மாதிரியை மட்டும் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால், உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் மிகவும் கூலாக பதிலளித்து சென்றுள்ளனர்.

புகார்கள் தொடர்ந்து குவிந்தும், இதுவரையிலும் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சோழராஜபுரத்திலிருந்து மட்டும் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிடுவதற்காக வேன் பிடித்து, புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதுடன், உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விடியா திமுக அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version