மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில், கீழடி கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 4 மற்றும் 5ஆம் கட்ட அகழாய்வில் ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வில் கிடைத்த பொருட்களை கீழடியில் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு தற்காலிக கண்காட்சியகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் இரண்டு அறைகளில் கீழடி பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் கீழடி கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன், பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.