ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் வரும் 27ந் தேதி தொடங்கி வைக்கிறார். ராமேஸ்வரத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை காண இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர்.
கடந்த 2 ஆண்டில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 27ந் தேதி அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் மணிகண்டன், மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். மேலும், கலாம் குடும்பத்தாரினர் நடத்தி வரும் அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியை துணை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.