சென்னையில் முதல்வர் துவக்கி வைத்த நலத்திட்டங்கள்: சிறப்பு தொகுப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அது குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகளுக்கு குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக கணக்கெடுப்பு நடைபெற்று விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு வனத் துறை சார்பில் வனக்காப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் பணியிடங்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதேபோன்று, குடிநீர்-கழிவு நீர் அகற்று வாரியத்தில் 320 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, 7 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்.

சேலத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா சுற்றுச்சூழல் அரங்கத்தை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடும் அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதனடிப்படையில் தடகள வீரர் தருண், துடுப்பு படகோட்டும் வீரர் லஷ்மணன் ரோகித் மரடப்பா ஆகியோருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பள்ளிக்கல்வித் துறையில் 533 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முன்னதாக, பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் இந்த திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

Exit mobile version