இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்கள் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, இன்று முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி திட்ட பிரதான இரட்டை மதகுகளின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, வரும் 16 முதல் டிசம்பர் 11 வரை தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 747 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மகிழ்ச்சியிடன் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.