ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் விசாரணை

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்துகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரனை நடத்தி வருகிறது.இவ்வழக்கு தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ முயன்ற போது மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். இதுதொடர்பாக தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார்.

இந்தநிலையில் ராஜிவ் குமாரை கைது செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் நேற்று ஆஜரானார். இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்பு ராஜிவ்குமார் ஆஜராக உள்ளார். அவரிடம் சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு ஆவணங்களை அழித்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Exit mobile version