மஜக பிரமுகர் கொடூர கொலை; வாணியம்பாடியில் பதற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், மனிதநேய ஜனநாயக் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகியை, மர்ம கும்பல் ஒன்று துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்று தலையை துண்டித்து எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம். மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில இணைச் செயலாளரான இவர், நேற்று மாலை மசூதியில் தொழுகை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை ஓட ஓட அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரது தலையை துண்டித்து எடுத்துச் சென்றனர். இந்த கோர நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது.

தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பிய அவர்கள் பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாணியம்பாடி நகருக்கு வரும் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் கடைகளும் அடைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று இந்த கொடூர கொலை நிகழ்ந்துள்ளதை அடுத்து, அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கையாக வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடும் பணியும் தொடங்கியது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி தப்பி ஓடுவதை கண்ட போலீஸார் அந்த காரை மடக்கினர். அதில் இருந்த வண்டலூரைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, டில்லி குமார் ஆகிய இருவரை பிடித்த போலீசார் ம.ஜ.க முன்னாள் நிர்வாகி கொலையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Exit mobile version