தமிழகத்தின் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, திருச்சி, திருத்தணி, தஞ்சாவூர், உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.