அடுத்த 48 மணி நேரத்தில் மிரட்ட வருகிறது ‘நிவர்’!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே 25ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் மழைக்கும், 24 மற்றும் 25 தேதிகளில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்பட உள்ளது. வரும் 25-ம் தேதி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் போது, 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version