இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்த குழு, பலமுறை ஆலோசனை நடத்தி, தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய 275 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று சமர்ப்பித்தது. அப்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கராஜன், கொரோனா தொற்றால் பொருளாதாரம் மந்தம் அடைந்துள்ளதாக கூறினார். ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.71 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று அவர் கூறினார்.
அதோடு, நடப்பாண்டில் வரி உயர்வுக்கு வாய்ப்பு இல்லை என்றும், வருங்காலத்தில் விலைகள் உயர்ந்தால் வரியை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் ரங்கராஜன் கூறினார். ரேஷன் கடைகள் மூலம், நவம்பர் மாதம் வரை அரிசி வழங்கப்படுவதாகவும், அதை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக கிராமங்களில் உழைப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் திட்டத்தைப் போல, நகர் புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக பரிந்துரைக்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கட்டுமானப் பணியாளர்கள் தொடர்பான நிதி 3,200 கோடியை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாகவும் ரங்கராஜன் கூறினார்.
நடப்பாண்டில் சுகாதாரத்துறைக்கு 5,500 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறிய ரங்கராஜன், நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதை விட 10,000 கோடி ரூபாய் அதிகமாக மூலதன செலவை அதிகரிக்கவும், தொழில் வளர்ச்சி மூலதனத்தை ஆயிரம் கோடியாக உயர்த்தவும், சிறு தொழிலுக்கான கடன் உத்தரவாத திட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.