சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயியின் மகன் தனுஷ், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த அவர், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத, தனுஷுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.
நீட் தேர்வில் பங்கேற்பதற்காக, நேற்று நள்ளிரவு வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த கருமலைக்கூடல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீட் தேர்வில் தேர்வில் பங்கேற்கவிருந்த விவசாயி மகன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்குப் பிறகாவது, நீட் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனுஷின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாணவனின் உடலை பார்த்து, உறவினர்கள் கதறி அழுதது, நெஞ்லை உலுக்குவதாக இருந்தது.
தேர்தலின்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாமல் மாணவர்களை ஏமாற்றியது.
நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு குழப்பியதால் இதுபோன்ற தேர்வுக்கு தயாராவதா? வேண்டாமா? என்ற தடுமாற்றத்தில் இருந்தனர்.
இந்தநிலையில், மாணவன் தனுஷ் தற்கொலை செய்துகொண்டது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.