உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு திமுக தொடர்ந்த வழக்கால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளில் 12 ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகளும், 121 நகராட்சிகளில் 7 ஆயிரத்து 386 வாக்குச்சாவடிகளும், 528 பேரூராட்சிகளில் 9 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகளும், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் 63 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் என மொத்தம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்காக 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.

எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து, தேர்தலுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

Exit mobile version