சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சுகாதாரத்துறையில் தமிழகம் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ளதாக கூறினார். 2018ம் ஆண்டு முதல் மருத்துவ காப்பீட்டுத் தொகை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 51 ல லட்சம் கற்பிணி தாய்மார்களுக்கு 4 ஆயிரத்து 651 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.