தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், எந்த தொழிற்சாலையும் மூடப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
இதேபோல், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது அதிமுகவின் கொள்கை என்றும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டுவருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகளால் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேர அதிநவீன சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தஞ்சை மாவட்டம் வீரமரசன்பேட்டையில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்வது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கன்னிப் பேச்சு நிகழ்த்திய விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில், உங்களால் நான் உங்களுக்காகவே நான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருவதாக பேசினார்.