தாய்மொழியான தமிழில் பேசுவது பெருமிதம் அளிப்பதாக, மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தின் போது பொதுக்கூட்டத்திற்கு மதுரை வந்த மகாத்மா காந்தி, அரையாடை புரட்சியை ஏற்படுத்தினார். இந்த புரட்சி தொடங்கி இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, அங்குள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கதர் விற்பனையகத்தை, அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தாய் நிலமான மதுரைக்கு வந்ததை புனிதமாக கருதுவதாக குறிப்பிட்டார். பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்று வணங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மகாத்மாவின் உடை மாற்றத்திற்கு காரணமாக இருந்த மதுரை மக்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அவர் கூறினார்.