உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது, சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 247 பொது சின்னங்களையும் அறிவித்து மாநில தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு, கடந்த தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னங்களையே வழங்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட 3 நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தால், அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.