ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் லின் ரன் ஏதும் எடுக்காமலும் சுனில் நரின் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆந்த்ரே ரஸ்ஸல் மட்டும் நிதானமாக ஆடி ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் 9 விகெட்டுகளை இழந்த கொல்கத்தா 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
109 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 17 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டு பிளிஸ்சிஸ் நிதானமாக ஆடி ரன்களை குவித்தார்.
17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 புள்ளிகளை பெற்ற சென்னை புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.