ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு

ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியில் இருந்து சேலம் நகர பேருந்து நிலையத்தை நோக்கி 50 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கந்தம்பட்டி என்ற பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது பேருந்தில் அடிப்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.  மேலும் பேருந்தில் இருந்த பயணிகளும் அவசர அவசரமாக வெளியேறினர். இதற்கிடையில் பேருந்தில் பற்றிய தீ அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேருந்தின் உள் பக்கம் முழுவதும் எரிந்து நாசமானது. சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் டீசல் கசிவு ஏற்பட்டு எஞ்சின் வெப்பத்தால் தீப்பிடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version