உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யட தய்யட தய்யடா! சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் லூட்டி!

அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சேலம் மாநகராட்சியில் உள்ள மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மாநகராட்சி மேயர், திமுக கவுன்சிலர்களை உல்லாச சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருக்கும் சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் தொடர்பான வீடியோக்கள்தான் இவை.
தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதி சரியாக இல்லை, மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை, கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது என்றெல்லாம் பிரச்சனைகளைச் சொல்ல பொதுமக்கள் கவுன்சிலர்களைத் தேடிக் கொண்டிருக்க, அவர்களோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உல்லாச சுற்றுலாவில் திளைத்து வருகிறார்கள். இதற்கான உபயம் என்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை கைகாட்டியிருக்கிறார்கள்.

மேயர் ராமச்சந்திரன் எதற்காக திமுக கவுன்சிலர்களை அழைத்துச் செல்ல வேண்டும்..? எல்லாம் பதவி படுத்தும் பாடுதான்…
சேலத்தில் திமுகவில் நிலவும் உள்கட்சி குழப்பத்தால் எங்கே தனது பதவிக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என்றுதான் மேயர் ராமச்சந்திரன் இப்படி கவுன்சிலர்களை கவனித்து வருகிறார் என்கிறார்கள்.

சேலம் திமுகவில் மத்திய மாவட்ட செயலாளரான ராஜேந்திரனும் எம்.பி.யான எஸ்.ஆர். பார்த்திபனும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி கவுன்சிலர்களாகவும் இருவரது ஆதரவாளர்களும் உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை மாற்றவேண்டும் என தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பிய, பார்த்திபன் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் சர்க்கரை சரவணன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்சியில்இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மேலும் பல கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் ராஜேந்திரனின் ஆதரவாளரான மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார். மாநகராட்சியில் உள்ள 70 கவுன்சிலர்களில் 47 பேர் திமுகவினர். அவர்களில் 40 பேரை குடும்பத்தோடு கேரளாவுக்கு 3 நாட்கள் உல்லாச சுற்றுலாவுக்கு பேருந்துகளில் அழைத்து சென்றிருக்கிறார் மேயர் ராமச்சந்திரன். அங்கு சொகுசு ஹோட்டலில் அறைகளும், ஹவுஸ் போர்ட் பயணம், ராஜ விருந்து என சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பேருந்தில் பயணித்த வீடியோ காட்சிகள், கேரளாவில் ஹவுஸ் போட்டில் பயணம் செய்த காட்சிகள் வெளியான நிலையில் தற்போது தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்ட கவுன்சிலர்கள், தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் புகைப்படங்களை பதிவிடவில்லை.

சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டப் பணிகளும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழி வெட்டப்பட்டு அது நிறைவு பெறாமல் மரண குழியாக காட்சியளிக்கின்றது. குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை, மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் மாறுதல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் அன்றாடம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தற்காத்துக் கொள்ள கவுன்சிலர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version